Monday, 19 March 2012

என் ஹர்ஷிதாவுக்கு (மகிழ்ச்சியை கொண்டு வருபவள்) தாலாட்டு

பெண் பிறந்திருக்கிறாள் 
          என்றதும்
பெருமை கீரிடம் 
          சூடினேன்.

கண் சுருக்கி, உதடு சுழித்து   
         கள்ளமில்லா ஜீவனாய் 
நீ சிரிப்பதும், அழுவதும் 
        ஆனந்த நிலையம்தான்.



ஆனால் உன்னை
          கண்ணே, பொன்னே,
மணியே, மலரே 
          என்று கொஞ்ச மாட்டேன்.

புதுக்கவிதையை 
         உறையிலிருந்து எடுத்தால் தான்          
வாளா? என்று கேட்டு,
         புதுத்தடமிட்ட 
கவிப்பேரரசு வைரமுத்து போல,

பெண் இலக்கண 
        வீதியை தாண்டி,
புதிய பரிணாம 
         வெளியில் வந்த 
என் புதுக்கவிதை நீ.

மகளே நீ 
         கண்ணீர் உறவறியா 
விடியலாவாய். 

உன் விழிகள் 
         மீன், மானல்ல,
வீரிய விதைகளை
         தேக்கி வைத்திருக்கும் 
நேர் விழிகள்.



என் 
தங்கம் வைரமல்ல நீ
          வெற்றுச் சடங்குகளை 
உடைக்க போகும்
           உறுதியின் உறைவிடம்.

சிரிப்பு 
முத்தல்ல, முல்லையல்ல 
           பெண் முகவரியில் 
புதுமை சொல்லும் 
           முனைப்பு சிரிப்பு .



நீ
பால் வெளி நிலா வீதியில்,
          உலாவ வந்தவள் அல்ல.
சரித்திரமாய் சாதிக்கப் பிறந்தவள் 
           புதிய பெண் தலைமுறையின் 
வரவுகளில் நீயும் ஒருத்தி.

அதனால், மகளே
          சுட்டெரிக்கும் சூரியனிலும்,
சுகமாய், சுவாசிக்க 
          கற்று தருகிறேன்.

மகிழ்ச்சியை உனக்குப்
         பெயராக சூட்டுகிறேன்.
தாய்த்தமிழ் போலவே,
          தலை நிமிர வைப்பாய் 
எனத் தாலாட்டுகிறேன்

        

        




No comments:

Post a Comment