Sunday, 25 March 2012

நெஞ்சில் நிற்கும்

 இன்று வரை பல நூறு காதல் பாட்டுகளை கேட்டிருப்போம். அனால் மொழி, சொல்லாட்சி , இனிய இசையென்று, நம் நெஞ்சில் நிற்கும் பாடல்களை பார்க்கலாமா?


மாட்டுவண்டி நுழையாத இடதில்லெல்லாம் கூட தன் பாட்டுவண்டியை செலுத்திய கவிபேரரசு கண்ணதாசனின் காதல் பாடல்களைப் பார்க்கலாம்.  


காதல் மென்மையான உணர்வு.அதை வெளிப்படுத்தும் தன்மையும் மென்மையாகத் தான் வேண்டும். அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே ஐ லவ்  யூ, ஐ லவ் யூ என்று குரலெடுக்காமல் காதல் என்பது சொல்லாமல் தெரிய வேண்டுமே, சொல்லவும் தனிமை வேண்டுமே என்று தொடங்கி, பார்வை பரிமாற்றத்திற்குத் தாவும் கவிஞரின் பாடல்கள்.


"உன்னை நான் பார்க்கும் போது, விண்ணை நீ பார்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்கின்றாயே"; ;
"நேற்று வரி நீ யாரோ? நான் யாரோ? இன்று முதல் நீ வேறா? நான் வேறா?"
என்று பெண்மையின் நாணம் சுட்டி, தன் காதலை உறுதியூட்டும் இப்பாடலில் இலக்கிய சுவையின் சாயல் உண்டு.


நீ யாரோ? நான் யாரோ? அதனால் செம்புலப் பெயல்நீர் போல, நம் அன்புடை நெஞ்சங்கள் கலந்தனவே என்ற இலக்கிய காதலை இப்பாடல் சுட்டும்.



காதலிக்க அனுமதி வேண்டி, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா? என்று கேட்டு, ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன் என அறிந்து, செந்தமிழ் தேன்மொழியாள் என ரசித்து, பேசுவது கிளியா என்று கேட்டு, கட்டித்தங்கம் வெட்டிஎடுத்து என வர்ணித்து, மெதுவா மெதுவாத் தொடலாமா என்று கேட்டு, மெல்ல மெல்ல மேனி நடுங்குது மெல்ல என்று அச்சமும் நாணமும் கலந்து தொடுகையில் சிலிர்த்து பேசும். காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி என்றே பாராட்டும்   கவிஞரின் பாடல்கள். 


பின் என்ன  பொருத்தம் இந்த பொருத்தமென்று, வராயென் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ என்றழைத்து, பூமுடிப்பாள் பூங்குழலி என்று பாடும். பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி வந்து, காதலென்னும் கவிதையை கட்டிலில் கேட்டு, கவிதைக்கு பரிசாய் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவன்ணமாய் விளைந்த கலை அன்னமாய் மழலையை கொஞ்சும் இந்த பாடல்களை  கண்மூடி ரசித்துதான் கேட்டு பாருங்களேன். 


நிலாவும் காதலும் பிரிக்க முடியாத நண்பர்கள். போருக்குப் போன கணவனைப்  பிரிந்த ஒரு புது மனைவி நிலவை பார்த்தவுடன் சொல்கிறாள்.
"ஏ நிலவே, நானும் உன்னைப் போல் ஒரு பெண் தானே, என் வேதனையை அதிகப்படுத்துவது போல், இந்த திக்கில் காயாதே, அத்திக்கில்போ , போய் போருக்கழைத்த கோ (அரசன்) வைக் காய், எனைப் பிரிந்த அவரைக் காய் என்று இலக்கியத்தில் சொல்லுவாள். அந்த இலக்கிய சுவை 
                        "அத்திக்காய், காய், வெண்ணிலவே, ஆலங்காய் வெண்ணிலவே,
                         இத்திக்காய் காயாதே, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ,
                         கோவைக்காய், அவரைக்காய்""
என்று கவிஞரின் வரிகளில் நின்று,  "பார்த்தேன் சிரித்தேன் "   என்று தேனாகும்.

கொஞ்சம் கொலைவெறியிலிருந்து தள்ளி இந்தப் பாடல்களையும் கேட்டுத் தான் பாருங்களேன். 

மணி மணியான மருத்துவர்

குழந்தைக்கு உடல்நலக் குறைவு என்றால் காரணம் புரியாது , குழந்தை மருத்துவர் கிட்ட ஓடுவோம். 

ஒருவழியாக உள்ளே போயி மருத்துவரை பார்த்து, பக்கமாய் ஆன்டி-பயோடிக் எழுதி வாங்கி, மருத்துவர் கட்டணமாய் சில நூறு கொடுத்து வருவோம். இது தான் குழந்தை உடல் நலம் குறித்த மருத்துவ விசாரணை. 

காது கொடுத்து நாம் சொல்வதை கேக்க அவருக்கும் பொறுமை நேரமில்லை. நமக்கும் பொறுமையில்லை. 

ஆனா எங்க குழந்தை மருத்துவர் மணிவண்ணன் வழியே தனிவழி. ஏற்றத் தாழ்வில்லாமல் எல்லா குழந்தைகளையும் பரிசோதிப்பது, குழந்தை எடை  கூடவில்லயேன்னு கவலைப்படுவது, உடனடி நிவாரணம்னு ஆன்டி-பயோடிக் மருந்துகளை அள்ளி விடாமல், மருந்துகளை குறைப்பதுன்னு சொந்த குழந்தைகள் மாதிரி பாவிப்பார்.

குழந்தைக்கு குறை ஒன்றும் இல்லை என்று நம்மளை திருப்திப்படுத்துவார். குழந்தை உணவு நிறுவனத்துக்கும், மருந்து நிறுவனத்துக்கும் லாபம் கூட மாட்டார்.

குழந்தை வளரத் தேவையான வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளான பொட்டுக்கடலை, பச்சைப் பயறு, இராகி மாவு, நவதானியக் கஞ்சிகள்னு வீட்டிலயே, சுத்தமாக தயாரித்து கொடுக்க சொல்லுவார். அம்மா மாதிரி அதன் தயாரிப்பு முறைகளையும் சொல்லுவார்.

பார்க்கும் போதெல்லாம் கட்டண வசூல் இல்லை. பரிசோதனை மருத்துவத்திற்கும் மட்டுமே. இதை தப்பா புரிஞ்சிட்டு, ஓசிக்கு யாரும் போயிடாதிங்க. அவருக்கும் மணியான குடும்பம் உண்டு. 

மருத்துவம் வியாபாரமாகிப் போன இந்த நாளில், மருத்துவ உறுதிமொழியை, தக்க வைத்து சேவை புரிபவர் மணிவண்ணன். 

மருத்துவ உலகின் எங்க ஊர் அதிசயம் இவர். மணியான மருத்துவரே, வாழ்த்த வயதிருப்பதால் மருத்துவ சேவை தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.

Monday, 19 March 2012

என் ஹர்ஷிதாவுக்கு (மகிழ்ச்சியை கொண்டு வருபவள்) தாலாட்டு

பெண் பிறந்திருக்கிறாள் 
          என்றதும்
பெருமை கீரிடம் 
          சூடினேன்.

கண் சுருக்கி, உதடு சுழித்து   
         கள்ளமில்லா ஜீவனாய் 
நீ சிரிப்பதும், அழுவதும் 
        ஆனந்த நிலையம்தான்.



ஆனால் உன்னை
          கண்ணே, பொன்னே,
மணியே, மலரே 
          என்று கொஞ்ச மாட்டேன்.

புதுக்கவிதையை 
         உறையிலிருந்து எடுத்தால் தான்          
வாளா? என்று கேட்டு,
         புதுத்தடமிட்ட 
கவிப்பேரரசு வைரமுத்து போல,

பெண் இலக்கண 
        வீதியை தாண்டி,
புதிய பரிணாம 
         வெளியில் வந்த 
என் புதுக்கவிதை நீ.

மகளே நீ 
         கண்ணீர் உறவறியா 
விடியலாவாய். 

உன் விழிகள் 
         மீன், மானல்ல,
வீரிய விதைகளை
         தேக்கி வைத்திருக்கும் 
நேர் விழிகள்.



என் 
தங்கம் வைரமல்ல நீ
          வெற்றுச் சடங்குகளை 
உடைக்க போகும்
           உறுதியின் உறைவிடம்.

சிரிப்பு 
முத்தல்ல, முல்லையல்ல 
           பெண் முகவரியில் 
புதுமை சொல்லும் 
           முனைப்பு சிரிப்பு .



நீ
பால் வெளி நிலா வீதியில்,
          உலாவ வந்தவள் அல்ல.
சரித்திரமாய் சாதிக்கப் பிறந்தவள் 
           புதிய பெண் தலைமுறையின் 
வரவுகளில் நீயும் ஒருத்தி.

அதனால், மகளே
          சுட்டெரிக்கும் சூரியனிலும்,
சுகமாய், சுவாசிக்க 
          கற்று தருகிறேன்.

மகிழ்ச்சியை உனக்குப்
         பெயராக சூட்டுகிறேன்.
தாய்த்தமிழ் போலவே,
          தலை நிமிர வைப்பாய் 
எனத் தாலாட்டுகிறேன்

        

        




Thursday, 15 March 2012

மாங்கனி நகரின் சரவணா உணவகம்

அம்மா பசிக்குதே, தாயே  பசிக்குதேன்னு மல்லுகட்டும் வயிறை பொறுமை பொறுமைன்னு அதட்டியபடியே இறங்கினேன்.


இடம்: சேலம் புதிய பேருந்து நிலையம்.


எங்கே தேடுவேன்?முருகா ,நல்ல உணவகத்தை என புலம்பி நிமிர்ந்த போது, யாமிருக்க பயமேன் என்று அபயம்யளித்து எதிரில் வரவேற்றது சரவணபவன் உணவகம்.


தேடினேன் வந்தது.நாடினேன் தந்தது நல்ல உணவை சரவணபவன். சுத்தமான சுழலில், சுவையான சுகாதாரமான உணவு, வாடிக்கையாளரை உபசரிக்கும் பாங்கு என மனசுக்கும்,  வயிற்றுக்கும் இதம் தந்தது சரவணபவன். சரவணபவனை சந்தித்த வேளைகள் தொடர்ந்த போது, அடடா எத்தனை உணவுகள், எல்லாமே சுவை கொண்டாட்டம்.

மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார், விதவிதமான விறுவிறு சட்னிகள், புது பெண்ணாய் பூரி மசால், பட்டு சப்பாத்தி, கொஞ்சும் குருமா, இளமை ததும்பும் முறுகல் ரவா தோசை, சல் என்று நாவில் இறங்கும் சாம்பார் வடை, வழுக்கி விழும் நெய் பொங்கல், ஆட்டம் போடும் அடை அவியல், இடிக்காத இடியாப்பம், ஆப்பம், சம்மரில் ராகிகூழ், தயிர் சேமியா, வித்யாசமாய் ஓட்ஸ் உப்புமா, ஐந்து வகை தோசை, நித்தமும் கமகம, சரி, கம கமன்னு சங்கீதம் பாட வைக்கும் காபியும் உண்டு. சில்லுனு பழசாறும் உண்டு.


சரவணபவன் வெற்றிக்கு காரணம் அதன் நிறுவனர் உழைப்பால் உயர்ந்த மனிதர், திரு வி .சி.சிவராமன் அவர்கள். அண்ணல் காந்தியடிகள் சொன்னது போல வாடிக்கையாளர்களே தெய்வம்.அவர்தம் சேவையை திருப்பணி என்ற மனப்பாங்கு உடையவர். பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதற்கேற்ப உயர்விலும் எளிமை மிக்கவர்.

தன் தொழில் அக்கறையால், கடின வெற்றியை தக்க வைத்து, தொடர் வெற்றிகளின் சாதனையாய் சரவணாவின் பல்வேறு கிளைகளை பரப்பியுள்ளார்.

நித்தம் ஒரு சுவைக்கும், மதிய உணவுக்கும் சரவணா கிளாசிக், ஆசைப்படுகிற உணவுக்கு சின்ன சின்ன ஆசை, நா ஊற வைக்கும் கிரீமி கேக் ஷாப், பேக்கரி, குளுகுளு ஏற்காட்டில் சுடசுட சரவணா பாஸ்ட் புட் என பல தொடர் கிளைகள் உண்டு.


மாங்கனி நகருக்கும் வருகை தரும் மக்களே!  சுற்றுலா மட்டுமல்ல சுவையான உணவு தரும் சரவணாவில் உண்டு மகிழுங்கள். சேலத்தின் சிறப்புகளில் சரவணா உணவகமும் கூட. 

Monday, 12 March 2012

நிஜமாக

வருடந்தோறும்
தீபாவளி பொங்கல் 
அதைப் போலவே 
மகளிர் தினமும் 

ஒரு நாள் கூட்டத்தில் ,
பெண்ணுரிமை  பேச்சுக்கள் 
முடிந்தது
மகளிர் தினம் 

சந்திக்கின்ற கொடுமைகளை,  
சரிவுச் சடங்குகளை
சாய்ப்பதும் மிதிப்பதும்
பற்றி சிந்தித்தோமா ?
சினம் கொண்டோமா ?

படிப்பும் பதவியுமா, 
பெண்ணுரிமை ?
சக மனுஷியாய் 
உணர்வுகளை 
மதிப்பதல்லவோ 

அடர்ந்த மரங்களின் 
இலைகளின் ஊடே 
எட்டி பார்க்கும் 
வெளிச்ச கீற்றாய் தான் 
இன்று பெண்ணுரிமை  

ஆராதனைக் கூடங்களுக்கு  
மூடு விழா இல்லை
ஆடைகளில் மட்டும் 
சரி நிகர் சமானம் 

போராட்ட குணத்தை 
புதைத்து, 
விழிப்புணர்ச்சியை 
தொலைத்து,
தன்னம்பிக்கையை 
பதுக்கி 
சொந்தக்காலை
வெட்டிவிட்டோம் 

சிறகுகள் வளர்ந்தும் 
பறக்கத் தடுமாறுகிறோம். 
சிவப்பிலும் கறுப்பிலும் 
சிதைந்தோம். 

இமயமாய் 
நிமிர வேண்டிய நாம்,
இடுக்குகளில் மட்டும் 
வாசம் செய்கிறோம். 

விதிகள் சரித்திரங்கள் 
அல்ல, 
மாற்றி  எழுதக்  கூடிய  
வழித் தடங்களும் கூட.

நிழலாக வாழ்ந்தது போதும்
இனியேனும் 
நிஜமாக வாழ்வோம். 


Hi

Hello World!
I am Selvi Jagan, new entry to blogosphere.
I am an orator, a poet and strong modern woman. In this blog, I want to write about my thoughts and views on Womanhood and life in general.
Look forward to my posts!
Selvi