Sunday, 25 March 2012

நெஞ்சில் நிற்கும்

 இன்று வரை பல நூறு காதல் பாட்டுகளை கேட்டிருப்போம். அனால் மொழி, சொல்லாட்சி , இனிய இசையென்று, நம் நெஞ்சில் நிற்கும் பாடல்களை பார்க்கலாமா?


மாட்டுவண்டி நுழையாத இடதில்லெல்லாம் கூட தன் பாட்டுவண்டியை செலுத்திய கவிபேரரசு கண்ணதாசனின் காதல் பாடல்களைப் பார்க்கலாம்.  


காதல் மென்மையான உணர்வு.அதை வெளிப்படுத்தும் தன்மையும் மென்மையாகத் தான் வேண்டும். அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே ஐ லவ்  யூ, ஐ லவ் யூ என்று குரலெடுக்காமல் காதல் என்பது சொல்லாமல் தெரிய வேண்டுமே, சொல்லவும் தனிமை வேண்டுமே என்று தொடங்கி, பார்வை பரிமாற்றத்திற்குத் தாவும் கவிஞரின் பாடல்கள்.


"உன்னை நான் பார்க்கும் போது, விண்ணை நீ பார்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்கின்றாயே"; ;
"நேற்று வரி நீ யாரோ? நான் யாரோ? இன்று முதல் நீ வேறா? நான் வேறா?"
என்று பெண்மையின் நாணம் சுட்டி, தன் காதலை உறுதியூட்டும் இப்பாடலில் இலக்கிய சுவையின் சாயல் உண்டு.


நீ யாரோ? நான் யாரோ? அதனால் செம்புலப் பெயல்நீர் போல, நம் அன்புடை நெஞ்சங்கள் கலந்தனவே என்ற இலக்கிய காதலை இப்பாடல் சுட்டும்.



காதலிக்க அனுமதி வேண்டி, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரலாமா? என்று கேட்டு, ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன் என அறிந்து, செந்தமிழ் தேன்மொழியாள் என ரசித்து, பேசுவது கிளியா என்று கேட்டு, கட்டித்தங்கம் வெட்டிஎடுத்து என வர்ணித்து, மெதுவா மெதுவாத் தொடலாமா என்று கேட்டு, மெல்ல மெல்ல மேனி நடுங்குது மெல்ல என்று அச்சமும் நாணமும் கலந்து தொடுகையில் சிலிர்த்து பேசும். காலங்களில் அவள் வசந்தம், மாதங்களில் அவள் மார்கழி என்றே பாராட்டும்   கவிஞரின் பாடல்கள். 


பின் என்ன  பொருத்தம் இந்த பொருத்தமென்று, வராயென் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ என்றழைத்து, பூமுடிப்பாள் பூங்குழலி என்று பாடும். பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி வந்து, காதலென்னும் கவிதையை கட்டிலில் கேட்டு, கவிதைக்கு பரிசாய் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவன்ணமாய் விளைந்த கலை அன்னமாய் மழலையை கொஞ்சும் இந்த பாடல்களை  கண்மூடி ரசித்துதான் கேட்டு பாருங்களேன். 


நிலாவும் காதலும் பிரிக்க முடியாத நண்பர்கள். போருக்குப் போன கணவனைப்  பிரிந்த ஒரு புது மனைவி நிலவை பார்த்தவுடன் சொல்கிறாள்.
"ஏ நிலவே, நானும் உன்னைப் போல் ஒரு பெண் தானே, என் வேதனையை அதிகப்படுத்துவது போல், இந்த திக்கில் காயாதே, அத்திக்கில்போ , போய் போருக்கழைத்த கோ (அரசன்) வைக் காய், எனைப் பிரிந்த அவரைக் காய் என்று இலக்கியத்தில் சொல்லுவாள். அந்த இலக்கிய சுவை 
                        "அத்திக்காய், காய், வெண்ணிலவே, ஆலங்காய் வெண்ணிலவே,
                         இத்திக்காய் காயாதே, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ,
                         கோவைக்காய், அவரைக்காய்""
என்று கவிஞரின் வரிகளில் நின்று,  "பார்த்தேன் சிரித்தேன் "   என்று தேனாகும்.

கொஞ்சம் கொலைவெறியிலிருந்து தள்ளி இந்தப் பாடல்களையும் கேட்டுத் தான் பாருங்களேன். 

No comments:

Post a Comment